Judgement at Nuremberg - தவறவிடக்கூடாத படம்

1961ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ' JUDGEMENT AT NUREMBERG ' என்ற படம் மனித மனசாட்சியை உலுக்கி கேள்வி கேட்கும் உயர்ந்த திரைப்படங்களில் ஒன்று. ஸ்டான்லி கிராமர் என்பவர் இயக்கி, ஸ்பென்சர் ட்ரேசி என்பவர் நடித்தார். இரண்டு ஆஸ்கர் விருதுகளைக் குவித்த இப்படத்தை நேற்று நெட்ஃபிளிக்ஸின் உபயத்தால் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தா(ன்)ர். யுத்த முடிவில் ஹிட்லர் இறந்தும் போனான். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது, யாரை குற்றவாளி என்று விசாரணை செய்வது என்ற கேள்வி எழுந்தது..

எந்த அதிகாரிகள், மந்திரிகள், நீதிபதிகள், ஹிட்வரின் உத்தரவுகளை செயல்படுத்தினார்களோ, அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து, அவர்கள் மீது நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டு, ஜெர்மனியில் உள்ள 'நூரம்பெர்க்' என்ற இடத்தில் பொதுவிசாரணை நடந்தது..

அந்தச் சம்பவமே இப்படத்தின் மையம்..

அமெரிக்க நீதித் துறையின் சார்பில் நூரம்பெர்க் விசாரணைக்கு தலைமை ஏற்கிறார் நீதியரசர் டான் ஹோவர்ட்..

இவர் விசாரிக்கப் போகும் குற்றவாளிகள், யூதப்படுகொலை சம்பவங்களுக்கு உத்தரவு தந்த அவரைப் போன்ற நீதிபதிகள். அதில் ஒருவர் சட்டநூல்களை எழுதி உலகப் புகழ்பெற்ற எர்னெஸ்ட் ஜேனிங்.. இன்று குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். இந்த விசாரணையை ஹோவர்ட் எப்படி நடத்துகிறார் என்பதை துப்பறியும் படங்களைப் போல நாற்காலியின் நுனியில் உட்காரச் செய்வதே இப்படத்தின் தனிச்சிறப்பு.

நீதி விசாரணையின் முடிவில் நாஜி படுகொலைக்கு ஹிட்லர் மட்டுமே காரணம் அல்ல. அவரைக் கொண்டாடிய பொதுமக்களும், அவரால் ஆதாயம் அடைந்த அதிகாரிகளும், அவரைப் பற்றிய உயர்வான பிம்பத்தை உருவாக்கிய ஊடகங்களும், ஹிட்வரை ஆதர்ச நாயகனாக வழிபட்ட தேசங்களும், ஹிட்லருக்கு பொருள் உதவி செய்த தொழிலதிபர்களும் கூடக் குற்றவாளிகளே ! அதிகாரிகள் நீதிபதிகள், உயிர்  பயத்தில் அப்படி நடந்து கொண்டாலும், தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட்டது தவறே என்று தீர்ப்பளிக்கிறார்‌.

படம் முழுவதும் அரசின் குற்றங்கள் எவ்வாறு மறைக்கப்படுகின்றன, அதிகாரிகள் எவ்வாறு விசாரிக்கப்பட வேண்டும், எவ்வாறு தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று ஆழமாக விவாதிக்கப்படுகிறது. ஒரு வரலாற்று ஆவணமாக இருந்தாலும் அதை விறுவிறுப்பாக நகர்த்தியதில் ஸ்டான்லி கிராமர் தனித்து ஒளிர்கிறார்.

Comments