JEE மற்றும் NEET தேர்வுகள் ஒன்று தானா ?

பொதுவான அரசியல் அடிப்படைகள், இட ஒதுக்கீடு பற்றிய அறிவு, மத்திய அரசின் பட்டியல் மாநில அரசின் பட்டியல் எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் வெறும் யூட்யூப் வீடியோக்கள் மற்றும் கட்சி அறிக்கைகளை வைத்துக் கொண்டு கேள்வி கேட்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. நீட் விவகாரத்தில் அவர்களின் முக்கிய கேள்வியில் ஒன்றாக இருப்பது மத்திய அரசின் IIT JEE தேர்வினை இத்தனை ஆண்டுகள் எதிர்க்காத தமிழகம் (!) ஏன் NEET தேர்வினை மட்டும் எதிர்க்கிறது என்பது தான். மேம்போக்காக பார்த்தால்  "அட ஆமால்ல" என்று சற்று அநீதியின் பக்கம் நின்று யோசிக்க வைக்கும் இந்த கேள்விக்கு விடையளிக்கவே இந்த கட்டுரை.



தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். கருத்தியல் அளவில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படிப்பதற்கான சூழலையும், சாத்தியங்களையும் உருவாக்க வேண்டும், அது தான் உண்மையான சமூக நீதி.


JEE Main / JEE Advanced என்பது ஐ.ஐ.டி மாதிரியான நேரடி ஒன்றிய அரசின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளுக்கும், ஒன்றியம் சொல்லும் டாப் பொறியியல் கல்லூரிகளும் (அதுவும் விருப்பபட்டு) பொருந்தும் ஒரு தகுதி தேர்வு. 


JEE Advancedல் வென்றால் தான் ஐ.ஐ.டிக்குள் நுழைய முடியும். ஆக இது ஒரு இடம் சார்ந்த தகுதித் தேர்வு. அதே தான் வி.ஐ.டி மாதிரியான தனியார் பல்கலைக்கழகங்கள் நடத்தும் உள்நுழைவு தேர்வுகளும். 


NEET என்பது ஒரு துறைக்கான தேசிய அளவிலான தகுதித்தேர்வு. அதுவும் குறிப்பாக மாநில பாடத் திட்டங்களையும், மாநில கல்வி புலங்களையும் முழுமையாக புறக்கணித்து, வலுக்கட்டாயமாக ஒன்றிய கல்வி புலங்களின் வழியாக வருவதையே தகுதித் தேர்வாக மாற்றியதை தான் முழுமையாக எதிர்க்கிறோம். மாநில கல்வி வழியில் 98% தேர்ச்சி பெறும் குழந்தைகளை முழுமையாக நீட் நிராகரிக்கிறது. அவர்கள் யாருமே ஒரே ஒரு ”இடத்தில்” கல்வி பெறுவதற்காக போராடவில்லை. மாறாக ஒரு துறையின் (மருத்துவம்) மீதான ஆர்வம் காரணமாகவும், அதில் தான் சாதிக்க வேண்டும் என்பதற்காக தான் போராடுகிறார்கள். 


நீட்டில் தேர்ச்சி பெற்றால் தான் மாநில அரசு சார்பு மருத்துவ கல்லூரிகள், மாநிலத்தில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகள், அமைப்பு சாரா தன்னார்வல மருத்துவ கல்லூரிகள் என நீட் என்பது ஒன்றியத்தின் மிதமிஞ்சிய அதிகார கரங்களால் வளைக்கப்பட்ட ஒரு தேர்வாக இருக்கிறது என்பதை தான் கேள்வி கேட்கிறோம். இதை தான் தமிழ்நாடு மாநில மருத்துவர்கள் அமைப்பு, ”நீட்டினை அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான தகுதித் தேர்வாக வைக்க கூடாது அதிலிருந்து நீக்கம் தரவேண்டும்” என்று 2017லிருந்து சத்தம் போட்டு சொல்கிறார்கள். ஆனால் அதை யாருமே செவி மடுக்கவில்லை. 


உண்மையில் நீட் என்பது வெறும் தகுதித் தேர்வு என்பதற்காக மட்டுமே தமிழகம் எதிர்க்கவில்லை. மாறாக, அது மாநிலங்களின் அதிகாரங்களை, மாநில உயர்கல்வி நிறுவனங்களின் தேவைகளை முழுமையாக காலில் போட்டு மிதித்து விட்டு, ஒன்றியத்திற்கு வானளாவிய அதிகாரங்களை தாரை வார்க்கிறது என்பதும், அரசு மருத்துவ கல்லூரிகளில் பயின்று மருத்துவர்களாக வலம் வருகின்ற அத்தனை பேரின் தகுதிகளையும் கேள்விக்குறியாக்குகிறது என்பதும் தான் தமிழ்நாட்டின் எதிர்ப்பிற்கான காரணம். 


இதில் பல அடுக்குகளில் நம் மாநிலத்தின் கல்விக்கான சூழலும், அதிகாரமும், பார்வையும் கண் எதிரே திருடப்பட்டு விட்டன, உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன என்பது தான் முக்கியமான கேள்வி. அதை தான் நாங்கள் திரும்ப பெற நினைக்கிறோம். இது வெறும் தேர்வு நீக்கத்திற்கான விவாதம் மட்டுமே கிடையாது. 


இடத்திற்கான தேர்வையும், துறைக்கான தகுதி தேர்வையும் ஒரே அலைவரிசையில் வைக்க முடியாது. NEETடையும், JEEயையும் ஒன்றாக பார்ப்பதை முட்டாள்தனம். 


”ஐ.ஐ.டிலயோ, வி.ஐ.டிலயோ படிச்சா தான் என் புள்ளயும், பொண்ணும் எதிர்காலத்துல நல்லா இருப்பாங்க” என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கான சாய்சை தர என்றைக்குமே தமிழ்நாடு மறுத்ததில்லை. மாறாக “என் புள்ள / பொண்ணு டாக்டராவணும், அதுக்கு நீட் தான் சரி” என்று சொன்னால், நீங்கள் peer pressureலும், நீட் என்பது தகுதி, மற்றவை தகுதியற்றவை என்று மூளை சலவை செய்யப்பட்ட மாங்காமடையர்கள். 


சாய்சினை தான் ஒரு அரசு தர முடியும், உரிமையை சாய்சில் விட முடியாது. 

Comments