புதிய வேளாண் சட்டங்களை நாம் எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் என்ன ?


மோடி ”எதிர்க்கட்சிகள் ஏமாற்றுகின்றன. அவர்கள் ப்ரோக்கர்களுக்கு வேலை பார்க்கிறார்கள். விவசாயிகளுக்கு தவறான தகவல்களை கொடுக்கிறார்கள்” என்றெல்லாம் ஆவேசமாக பேசினார். மோடி உண்மை பேசினால் தான் நாம் ஆச்சர்ய பட வேண்டும். பொய்கள், மூச்சு விடுவது போல சர்வ சாதாரணமாக அவர் வாயிலிருந்து வரும். 


பஞ்சாப்பிலும், அரியானாவிலும், கர்நாடகாவிலும் ப்ரோக்கர்கள் தான் தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு போராடுகிறார்களா ? 


இத்தனைக்கும் அரியானாவிலும், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சி தானே நடக்கிறது. ஏன் விவசாயிகள் இதை எதிர்க்கிறார்கள் என்பதற்கு நாம் கொஞ்சம் டார்டாய்ஸ் சுழற்ற வேண்டும். 


“வெண்மை புரட்சி”  என்கிற பெயரில் தான் இந்தியாவில் பால் கூட்டுறவு மாடல்கள் உருவாயின. குஜராத்தில் அமுல், தமிழ்நாட்டில் ஆவின், கர்நாடகாவில் நந்தினி. பால் உற்பத்தியாளர்களும் வேறு விதமான விவசாயிகளே. இந்த மாடல்கள் வெற்றிகரமாக இன்றைக்கு வரைக்கும் இயங்கி கொண்டு இருக்கின்றன. அதற்கு முக்கியமாக 3 காரணங்கள் உண்டு. 


1 ) உள்ளூரிலேயே விற்பது + உள்ளுர் சந்தைகள் / விதிகளோடு இயங்குவது (Local Sales or proximity to local selling point + Simplified Local legal power structure favoring the producer )


2 ) ஒன்று பட்டு விற்பது (அ) கூட்டுறவு சங்கங்களின் மூலம் விற்பது (Collective, co-operative, co-ordinated sales)


3 ) கூட்டு பேரம் பேசும் வல்லமை (Collective bargaining power)


இதில் முக்கியமானது மூன்றாவதாக இருக்கும் பாயிண்ட். 


ஏன் இந்த பால் உற்பத்தியாளர்கள் 1 - 2 ரூபாய் லிட்டருக்கு அதிகமாக கொடுத்தாலும் ஆரோக்யா மாதிரியான தனியார்களுக்கு விற்காமல் இருக்கிறார்கள் என்பதில் மேற்சொன்ன மூன்றும் முக்கியம். 


அதாவது அரசோ, கூட்டுறவு சங்கங்களோ என்றால் அதை எதிர்த்தும், அத்தோடு இணைந்தும், முரண் பட்டும் கூட்டு பேரம் பேசும் வல்லமை இவர்களுக்கு இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் இந்த கூட்டு பேரம் பேசும் சக்தியை அவர்களாகவே முன் வந்து கொடுத்தாலே ஒழிய, இவர்கள் அவர்களுக்கு சில ரூபாய் அதிக இலாபத்துக்காக விற்க முன்வர மாட்டார்கள். அதனால் தான் ஆரோக்யா “மாடு எங்க ரேஷன்கார்டுல இருக்கு, என் குடும்பமே நல்லா இருக்குக, நலம் அன்புடன் நம் கிராமங்களிலிருந்து” என்றெல்லாம் விளம்பரப்படுத்த வேண்டியதிருக்கிறது. There is a strong invisible relationship thru' collective bargaining power for consolidated local sales. 


விளைப்பொருட்களின் விற்பனை என்பதில் இடைநிலை (intermediary) - அது தனிநபர்களோ, கூட்டுறவு சங்கங்களோ, கொள்முதல் நிறுவனங்களோ ஒரு பெரும் வேலையை செய்கிறது. அதனால் தான் அந்த முறையில் சிக்கல்கள் இருந்தாலுமே கூட விவசாயிகள் இவர்களை நம்புகிறார்கள். மேலும் யாரோ ஒரு ப்ரோக்கரோ, சங்கமோ ஓவராய் ஆடினால், 10 கிராமங்கள் பேசி அவர்களோடு வணிகம் செய்ய மாட்டார்கள். அந்த கூட்டு பேர வலிமை என்பது இன்றைக்கும் களத்தில் இருக்கிறது. அதனால் தான் சிண்டிகேட்களும், cartelகளும் இயங்கினால் கூட அவர்களும் ஒரு வரம்புக்குள் தான் இயங்க முடியும், கொள்ளையடிக்க முடியும். இல்லை என்றால் விவசாயிகளும், விவசாய கூட்டமைப்புகளும் திருப்பி அடிப்பார்கள். 


மேலும்,  உள்ளூர் சந்தை என்பது முக்கியமானது. 10 - 15 கிராமங்கள் அடங்கிய ஒரு சந்தை / மண்டி / Agriculture Producer Marketing Organization (APMC) என்பதில் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். கொஞ்சம் முன்னே பின்னே பில்டப் காட்டி தரைக்கு மேலே ஆடினால், மற்றவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். It's not a perfect model, yet it has its own checks and balances. 


ஆக, proximityயும் collective bargaining powerம் விவசாயத்தினை பொறுத்தவரை அதி முக்கியமானவை. இந்த அடிப்படையை தான் புதிய வேளாண் மசோதாக்கள் தகர்கின்றன. ”எங்க வேணும்னாலும் வித்துக்க” என்பது சொல்லளவில் சிறப்பான முன்னெடுப்பாக தெரிந்தாலும் அவர்கள் தகர்க்க நினைப்பது இந்த உள்ளூர் சந்தை மாடலையும், கூட்டு பேர வலிமையும் தான். 


இதை ஒத்து கொண்டால், இந்த 10 - 15 கிராம விவசாயிகளால் எப்படி ஜார்கண்டின் ஒரு முதலாளியோடு மல்லு கட்ட முடியும் ? 


மாநில அரசை முழுமையாக ‘வணிக பரிவர்த்தனையிலிருந்து’ விலக்கி விட்டால், எப்படி ஒரு மாநில அரசு, தன்னுடைய மக்களுக்காக, இன்னொரு மாநில அரசின் கீழ் இருக்கும் ஒரு கம்பெனியோடு வாதாட முடியும் ? 


சரி, விவசாய பரிவர்த்தனைகளுக்காக சட்டங்களே போட்டாலுமே கூட, ஒரு முதலாளியாய் நான் என்ன செய்வேன். என்னுடைய வசதிக்கு ஏற்றாற் போல டெல்லியிலோ, மும்பையிலோ மட்டுமே வழக்கு தொடர முடியும் என்று தான் ஒப்பந்தம் செய்வேன். ஒரு சிக்கல் என்று வந்தால், தமிழ்நாட்டின் 40 கிராம விவசாயிகளால் எப்படி டெல்லிக்கோ, மும்பைக்கோ ஓட முடியும் ?


சிம்பிளாய் சொன்னால், நான்கு மாடுகள், ஒரு சிங்கம் என்கிற இரண்டாம் வகுப்பு கதை தான். 


நான்கு மாடுகளும் ஒன்றாக இருக்கும் வரை சிங்கத்தினால் எதுவுமே செய்ய முடியவில்லை. நான்கையும் தனித்தனியாக பிரித்து விட்டால், சிங்கம் தன் தேவைக்கு ஒவ்வொரு மாட்டையும் அடித்து சாப்பிடும். 


விவசாயிகள், வேளாண் அமைப்புகள், இடைநிலை அமைப்புகள், மாநில அரசு என்கிற நான்கு மாடுகளும் இன்றைக்கு ஒன்றாக இருக்கின்றன. ஒன்றியம் என்கிற சிங்கம் புதிய சட்டங்களை கொண்டு வந்து ஆசை காட்டி, இந்த நான்கையும் பிரிக்க முயல்கிறது. இன்றைக்கு கிடைக்க கூடிய தற்காலிக இலாபங்களுக்கு ஆசைப்பட்டு பிரிந்து விட்டால் ஒன்றிய சிங்கம் நம்மை தனித்தனியாக பிரித்து, அதன் தேவைக்கு அடித்து சாப்பிடும் (அ) அதன் தேவைக்காக நம்மை நிரந்தர அடிமையாக வைக்கும். 


எப்படி பேச்சுரிமை, எழுத்துரிமை, போராட்ட உரிமைகள் “தேசம், தேசியம், தேசப்பக்தி, ஒரே சந்தை” என்கிற போர்வையில் களவாடப்பட்டதோ அதே போல தான் சாமான்ய விவசாயிகளின் “வணிக உரிமையும், கூட்டு பேர வலிமையும்” வேளாண் சட்டங்களால் திருடப்பட திட்டங்கள் வகுக்கப் படுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் இதை தான் முன் நிறுத்துகின்றன. மாநிலங்கள் தங்களுடைய உரிமைகளுக்காகவும், தங்களுடைய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் இதை முற்றிலுமாக நிராகரிப்பது அவசியம். 


அக்.02, 2020 அன்று எழுதியது !

Comments