ஒரு கோப்பை மதுவின் கடைசித் துளி - சிறுகதை
~~
“வச்சப் பொருளை வச்ச இடத்திலிருந்து எடுக்க முடியுறதில்ல. எதை எப்படி மறைச்சி வச்சாலும் அதைக் கண்டுப்பிடிச்சிடுறான். கையில சிக்கும் பொருளை வாய்க்குள்ளே திணிச்சிக்கிட்டு குதப்புறான்" போனில் தெரிவித்திருந்தார் சித்தப்பா.
சுபாஷ் என் கண் முன்னால் நிழலாடிக்கொண்டிருந்தான். அவனை பார்க்கணும் போல தோன்றியது எனக்கு. அதை விட முக்கியம் சித்தப்பாவிற்கு ஆறுதல் சொல்லியாக வேண்டும். ஒரு மணி டவுன் பஸ்ஸை பிடித்து அவர் வீடு போய் சேர்வதற்குள் மணி மூன்று ஆகியிருந்தது. நான் வீட்டிற்குள் நுழைந்ததும் சுபாஷ் தலை தூக்கி பார்த்தான். பூப்போல சிரித்து வைத்தான். முன் பற்கள் கார்ட்டூன் முயலுக்கானதைப் போல செவ்வகங்களாக தெரிந்தன. அவனை தூக்கி தலையை மார்போடு அணைத்துக்கொண்டு உச்சந்தலையில் ஒரு முத்தம் பதித்தேன். என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டான்.
புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் வேகமாக ஓடினான். புத்தகங்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து விட்டெறிந்தான். பிறகு வண்ணமயமாக இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து உட்கார்ந்த படி கால்களை விரித்து வைத்துக்கொண்டு புரட்டினான். ஒரு பக்கத்தைச் சரட்டென கிழித்தான்.பிறகு அடுத்த அறையை நோக்கி ஓடியவன் அந்த அறையில் உள்ள சேலைகளை அள்ளி தலையில் போட்டுக்கொண்டு இரு கைகளையும் மேலே தூக்கி குதித்துக்கொண்டிருந்தான்.
குத்துக்காலிட்டு மகன் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார் சித்தப்பா. என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டார். சிரித்து வைக்குமளவிற்கு மனதில் சௌகரியமில்லை என்பதை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. இணக்கமற்ற வெறுமையுடன் முகத்தைக் கடுமையாக காட்டிக்கொண்டிருந்தார்.
அவர் தலைக்கு மேல் தேவகியுடனான கல்யாணக்கோலம் நிழற்படமாக தொங்கிக்கொண்டிருந்தது. புகைப்பட கண்ணாடி நீண்ட விரிசல்கள் விட்டிருந்தன. அதன் மையத்தில் கல்லால் அடிப்பட்ட சுவடு தெரிந்தது. அதை கண்டதும் எனக்குள் ஏற்பட்ட விபரீத எண்ணங்கள், வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது.
“எப்படி சித்தப்பா கண்ணாடி உடைஞ்சது?“ கேட்டேன்.
படத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு சொன்னார். “நான் தான் உடைச்சேன்.“
“ஏன்.?“
“பிடிக்கல“ என்றார் அவருக்கே உரித்தான குணத்தில்.
“தேவ….சித்தி பற்றிய தகவல் எதாவது கிடைத்ததா சித்தப்பா? “
தொண்டையை செருமிக்கொண்டார். “ம். கிடைத்தது.“
“என்ன சித்தப்பா.?“
“எவன் கூடவோ ஓடிபோய்ட்டாளாம்“ எனச் சொல்லிவிட்டு துயரத்தைக் கண்களால் வடித்துக்கொண்டார். அவர் முகத்தில் அவலத்தைக் காட்டும் கோடுகள் மட்டும் தெரிந்தன. கையில் சிக்குண்ட குருவியைப் போல விழுக், விழுக் என முழித்துக்கொண்டு பரிதாபமாக உட்கார்ந்திருந்தார். கனத்த அவரது உருவம் காற்றடித்தால் சாய்கிற தேகமாக மெலிந்துப்போயிருந்தது.
சாராய நெடியும் சிகரெட் நாற்றமும் அவர் மேலிருந்து எப்போதும் வந்துக்கொண்டிருந்தன. அவர் கண்களை மூடி வீட்டின் கூரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். கன்னங்கள் ஒட்டிப்போய் தாடிகள் முகத்தில் அப்பிக்கிடந்தன.
தயவு தாட்சண்யம் பார்க்காமல் எல்லோருக்கும் வரும் காதல்தான் சித்தப்பாவிற்கும் வந்திருந்தது. வர வேண்டிய வயதில் அது வராமல் காலம் கடந்து வந்தது ஒன்றும் காதலின் குறை அல்ல. அது சித்தப்பாவின் குறைதான். உணர்வுகளை ஒடித்து நரம்புகளுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளும் கலை அவருக்கு வாய்த்திருந்திருந்தது.
அவர் எடுத்துப்படித்த பாடம் தமிழ். ஊரின் முதல் பட்டதாரி அவர்தான். தமிழ்நாட்டில் பிரசுரமாகும் அத்தனை வார இதழ்களையும் வாங்கி கையில் சுருட்டி வைத்துக்கொண்டு உலக இலக்கியம் பேசுவார். தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றத்தை கார்ல் மார்க்ஸ், லெனின் உடன் முடிச்சுப்போட்டு பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு முப்பது வயது ஆகிக்கொண்டிருந்த பருவத்தில் கல்யாண பேச்சு எடுத்தாகிவிட்டது.
அவர் உச்சாணிக் கொம்பிலிருந்து இறங்கி வருவதாக இல்லை. "நிலத்தை விற்று கடனை அடைக்கும் வரை நான் யாரையும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதில்லை" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். நிலத்தைப் பார்த்து போன பார்ட்டிக்காரர்கள் அனைத்தும் தகவல் சொல்லி விடுவதாக சொல்லி சொல்லியே தட்டிக் கழித்தனர். ஒரு வழியாக பம்பாயிலிருந்து வந்த பார்ட்டிக்காரன் நிர்ணயித்த விலைக்கே நிலத்தை வாங்கிக் கொண்டான். கடனை அடைத்தார். மீதமிருந்த பணத்தில் பக்கத்தூர் தாலுகா ஆபிஸ்லேயே ஒரு வேலையை வாங்கினார், புதிதாக ஆனால் அளவான ஒரு வீடு கட்டிக் கொண்டார். இரண்டு மரக்கால் வெதப்பாடு நிலம் வாங்கி வாழை போட்டார்.
கடைசி வரை நிலம் விற்காமல் இருந்திருக்க வேண்டும். "அப்பன் ஆத்தா சேத்த சொத்தக் கூட காப்பாத்த தெரியல* எனப் பத்து பேருக்குப் கேலியாக இருந்துவிட்டு போயிருப்பார். அவருக்கு நினைத்ததெல்லாம் நடந்தது தன் நாற்பதாவது வயதில். அதற்குப் பிறகு தான் வாலிப வயதில் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் அவருக்கு சுரக்கத்தொடங்கின.
பெண் பார்க்கும் படலத்தை அவரே தொடங்கினார். அவர் வேலை செய்யும் ஊரின் மருத்துவமனையில் உள்ள ஒரு செவிலி அவருக்குப் பிடித்துப்போயிருந்தாள். சாந்த முகமும் சந்தன நிறமுடைய அவளுடைய பெயர் தேவகி. திருமணம் எளிமையாக நடந்தேறியது. மறு வருடமே அவருடைய நகலாக சுபாஷ் பிறந்தான் . சித்தப்பாவைப்போல முகமும் சித்தியைப்போல நிறமும் கொண்டவனாகப் பிறந்தவன் ஒரு வாரக்காலம் அழாமலேயே மருந்துவமனையில் கிடந்தான்.
சித்தப்பா வருங்காலத்தில் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகள் எதையும் பற்றிய பிரக்ஞையின்றி அவனது முகத்தைப் பார்த்தே பூரித்தார். "சித்திதான் அவசர முடிவு எடுத்துவிட்டோமே..." என நாளும் பொழுதும் கிடந்து வருந்தினாள். இரண்டு வருடக்காலம் குழந்தையை வளர்த்து விட்டு ஒரு நாள் இரவு காணாமல் போய்விட்டாள்.
எப்பொழுதாவது மது அருந்தும் சித்தப்பா அதற்குப் பிறகு எப்போதுமாக அருந்த தொடங்கிவிட்டார்.
“சித்தப்பா...குடிக்கிறதை விடு. எல்லாப் பிரச்சனைக்கும் அதுதான் காரணம்“.
எனது சொற்களை அலட்சியப்படுத்திவிட்டு அறைக்குள்ளிருந்து ஒரு பாட்டிலை எடுத்து வந்து திறந்துக்கொண்டிருந்தார். இப்போதெல்லாம் அவரால் போதை இல்லாமல் இருக்க முடிவதில்லை.
ஒரு நாள் இரவு வீட்டை விட்டு கிளம்பிப்போனவர் மறுநாள் மதிய வாக்கில் வீட்டிற்கு வந்தார். உடுத்திருந்த ஆடைகள் கந்தைகளாகி போயிருந்தன. வாயிற்கதவை பிடித்தபடி தலையை கீழே தொங்கவிட்டு வெலவெலத்துப்போய் நின்றுக்கொண்டிருந்தார். வேட்டி முழுவதுமாக அவிழ்ந்துப்போயிருந்தது. கால்களை இருவர் ஆளுக்கொரு பக்கம் இழுப்பதைப்போல தாறுமாறாக கால்களை எடுத்து வைத்தார்.
“தேவா......... தேவா...........“ என அழைத்தார். சில நிமிடங்கள் கரைய அவரைப் பார்த்தேன். நிற்கப்போகும் பம்பரத்தைப்போல அவர் தலை சுற்றிக்கொண்டிருந்தது.
“ஏன் சித்தப்பா இப்படி குடிச்சு உடம்பை அழிச்சிக்கிறீங்க?“ என்ற பொதுக்கேள்வி என்னிடமிருந்து வெளிப்பட்டது.
ஏளனமாக என்னைப்பார்த்து சிரித்தார். கூட அவருக்கு அழுகையும் வந்திருந்தது.
“நாட்டுல யார் சித்தப்பா குடிக்கல ? . அரசன்ல இருந்து ஆண்டி வரைக்கும் அத்தனை பேரும் குடிக்கத் தான் செய்றான். தாகத்துக்கு குடிக்கிறான், துக்கத்துக்கு குடிக்கிறான், தூக்கத்துக்கும் குடிக்கிறான், வாழ்ந்தாலும் குடிக்கிறான். செத்தாலும் குடிக்கிறான். அதுக்குனு இப்படியா.?“
சித்தப்பா என்னை நெருங்கி வந்தார்.
“எனக்குண்டான அவமானம் எனக்குதான் தெரியும்?“
என்றபடி என் சட்டையைப் பற்றி தள்ளினார்.
“நீ ஏன் குடிகாரனானேனு? ஒவ்வொருத்தருக்கிட்டேயும் கேட்டால் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு மூட்டை காரணம் இருக்கும் சித்தப்பா. எத்தனை காரணம் இருந்தால் என்ன? அதுக்காக ஒரு போதும் குடியையும் போதையும் என்னால ஆதரிக்க முடியாது“
“டேய் நிறுத்துடா... போதையில எல்லோருமே அழிஞ்சிப்போனதில்ல. ஒரு கோப்பையிலே என் குடியிருப்புனு கண்ணதாசனே குடிச்சிட்டுதான் பாட்டு எழுதிருக்காரு“ என்றார்.
“செய்கிற தவறுக்கு நியாயம் சொல்றதுக்கு தத்துவம் பேசாதீங்க சித்தப்பா. அவரு காலத்தில வாழ்ந்த சுரதா மது குடித்தால் போதை வரும். அதை விடுத்து கவிதை வரும் என்பதெல்லாம் கட்டுக்கதையேனு எழுதிருக்காரு“
"பதிலுக்கு பதில் கொடுக்கிறானே என அவர் நினைத்தாரோ என்னவோ.!"
தப்படி எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தார். கண்களைக் கசக்கிக்கொண்டு உருட்டி திரட்டி முழித்தார். கொஞ்சநேரம் சுவற்றில் சாய்ந்தபடி இரு கால்களையும் நீட்டியபடி உட்கார்ந்திருந்தார்.
வீட்டுக்கு இன்னும் வாடகை கொடுத்தப்பாடில்லை. ஆபீஸுக்கும் சரிவர போறதுமில்லை. மகனைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. சதா நேரமும் குடித்தே மனைவி பற்றிய அவமான எண்ணங்களுடனே ஒவ்வொரு நொடியையும் நிமிடத்தையும் நாட்களையும் கடத்துகிறார்.
“மனைவி ஓடிப்போனது சரிதான். வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படிப் பொறுப்பு இல்லாமல் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தால் எவள் தான் பொறுத்துக்கிருவாள். வயசு வேற பல வருச வித்தியாசம். குழந்தையை நம்பி காலத்தைக் கடத்தலாமுனு பாத்தா அதுவும் ஆரோக்கியமாக பிறக்கலை. சொச்சக்காலத்தை நினைச்சிப்பார்த்தாள். ஆளை விடுடா சாமினு கிளம்பிட்டா..“ என பலரும் ஒரே மாதிரியாக பேசிக்கொள்வதை என்னால் கேட்க முடிந்தது.
சித்தப்பா மெல்ல எழுந்தார். அவரது அறைக்குள் நுழைந்தார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு வெளியே வந்தார். “நீ ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுற. நீ ஒன்னா நம்பர் குடிகாரப் பயலாஇருப்பே போலயே “என்னைப் பார்த்தப் படி சொன்னார்.
அவரிடம் வார்த்தைகளை விரயம் செய்ய விரும்பவில்லை. நுனி நாக்கு வரைக்குமாக வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன். உடலை குலுக்கி சிரித்தார். “நீ குடிக்க பழகியிருக்கே“ என்றபடி மறுபடியும் சிரித்தார். அந்தச் சிரிப்பு என்னை அறைந்தது போல இருந்தது.
"குடிக்காரர்களுக்கு யாரைப்பார்த்தாலும் குடிகாரனாகவே தெரிவார்கள் போலும்" தலையில் அடித்துக்கொண்டேன்.
“எத்தனை நாளா நீ குடிக்கிற?“
“நான் குடிக்கிறதுல்ல சித்தப்பா“
“பிறகு இது என்னவாம்?“ என்றபடி பாட்டிலைத் தூக்கிக் காட்டினார். பாட்டிலில் கொஞ்சம் போல மது குறைந்திருந்தது.
“குடிக்க தெரியுது இதை மூடி வைக்க தெரியல"
"டேய். பாட்டிலோட மூடியைக்கொடு“ என்றவாறு என்னை நெருங்கி வந்தார்.
என் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு துளாவினார். மூடி கையில் சிக்கவில்லை. பிறகு மொத்த மதுவையும் ஒரே மூச்சில் அருந்தினார். அடி எடுத்து வைக்க திராணியற்று அதே இடத்தில் சுருண்டு படுத்துக்கொண்டார்.
நான் பெரு மூச்சு விட்டபடி சுபாஷைப் பார்த்தேன். அவன் முயல் குட்டியைப்போல தூங்கிக்கொண்டிருந்தான். நல்ல வேளை இவன் இதையெல்லாம் பார்க்கவில்லை. நீண்ட நேரமாக தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்ப அருகில் சென்றேன். அவனது அவலத்தைக் கண்டு திடுக்கிட்டேன்.
அவன் கையில் அந்த பாட்டிலின் மூடி இருந்தது!
•


Comments
Post a Comment