போஸ்ட் மார்ட்டம் - சில குறிப்புகள்
எஸ்.ரா வின் உறுபசி நாவலில் மரணம் தான் முக்கிய கதை சொல்லி.
உறுபசி நாவலில் ஒரு பகுதி
// சாவு வீட்டை விட அதிலிருந்து கசிந்து வரும் ரோஜாப் பூக்களின் வாசனை வயிற்றை குமட்டத் துவங்கி மெல்ல அடிவயிற்றிலிருந்து ஒரு பயத்தை உருவாக்கிவிடும். சிறுவயதில் ரோட்டில் பிணத்தைத் தூக்கிக் கொண்டு போகும் போது எறியப்படும் செவ்வந்திப் பூக்களில் ஒன்று என் தலையில் விழுந்த போது நான் அடைந்த வேதனையும் துக்கமும் சொல்லவே முடியாது //
இதைப் போலத் தான் சாவைக் காட்டிலும், சாவை மையமாக வைத்து நிகழத்தப்படும் சம்பவங்கள் மீதும், சடங்கின் மீதும், கண்ணை மேல் நோக்கி பார்த்தவாறு இருக்கும் பிணத்தின் மீதும் தான் எனக்கு பயமே !!
கடந்த திங்கள், செவ்வாய் கிழமைகளில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அனட்டாமியில் ஏற்கனவே பிணத்தை பார்த்த பரிச்சயம் இருந்தாலும், அது பதப்படுத்தப்பட்ட பிணம் (பெரும்பாலும் இயற்கை மரணத்தால் உயிரிழந்து உடல் தானம் செய்தவர்கள்) என்பது ஆழமாக மனதில் பதிந்திருந்ததால் பெரிதான அச்சம் ஏதும் இல்லை. மேலும், அனட்டாமியில் உடலில் உள்ளிருக்கும் பாகங்கள் அனைத்தையும் படிக்க வேண்டும் என்பதால் பிணத்தின் மீது விழுகின்ற வெட்டு என்பது சிறு பொறி போல் தான் இருக்கும். அப்போது தான் எந்த சேதமும் இல்லாமல் உள்ளுறுப்புகளை பார்க்க முடியும்.
ஆனால், போஸ்ட் மார்ட்டத்தில் கதையே வேறு. அங்கு வருபவை பதப்படுத்தப்பட்ட பிணம் அல்ல, இயற்கை மரணங்களால் மரணத்தை சம்பவித்தவர்கள் அல்ல என்ற எண்ணம் இருந்ததால் பயம் பல மீட்டர்கள் எகிறியது.
நாங்கள் பார்த்த முதல் கேஸ் பாம்பு கடியால் இறந்த பெண். திரைப்படங்களில் காண்பிப்பது போல டாக்டர்கள் தான் போஸ்ட் மார்ட்டம் செய்வார்கள் என்று நினைத்தால் அது அபத்தம். டாக்டர் ஒரு ஓரமாக அமர்ந்து கொள்வார். பிணம் அறுப்பதற்கென்றே இருக்கும் இருவர் தான் அந்த வேலையை செய்வார்கள், சில சமயங்களில் பட்டமேற்படிப்பு மாணவர்கள் பயிற்சிக்காக செய்வார்கள் அவ்வளவு தான். சரி கேஸூக்கு வருவோம். பாம்பு கடியால் உயிரிழந்த(து)வர் அந்த ஏழடி மேஜையில் கிடத்தப்பட்டிருக்கி(றது)றார். வெட்டுபவருக்கு ஆண் பெண் என்ற பேதமெல்லாம் இல்லை. கத்தியைக் கொண்டு ஆடையைக் கிழித்து அம்மணமாக்குகிறார். பிணத்தை அறுப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய சில வேலைகளை (பற்களை எண்ணுவது, உயரத்தை அளப்பது) மட்டும் செய்துவிட்டு எந்திரம் போல் செயல்படத் தொடங்கினார். கீழ்தாடையில் தொடங்கி அடிவயிறு வரை ஒரு நேராக கிழி. நெஞ்செலும்புகளை உளி, சுத்திக் கொண்டு உடைத்து எறிகிறார். நாக்கை பிடித்து இழுத்து மொத்த உள்ளுறுப்புகளையும் வெளியே எடுத்துப் போடுகிறார். வெளி வர மறுக்கும் உறுப்புகளுக்கு மட்டும் கத்தியை பயன்படுத்துகிறார். அடுத்து கபால பகுதியை கத்தியால் கிழித்து மண்டையோட்டை ரம்பம் கொண்டு அறுக்கிறார்கள். அறுக்கும் போது வரும் வாடை நிச்சயம் குடலைப் பிடுங்கி தின்னும். மண்டையோட்டை உடைத்து மூளையை வெளியே எடுத்து ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கிறார். ஒவ்வொரு உறுப்புகளில் நூறு கிராம் பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு மீதமிருக்கும் மூளை உட்பட அனைத்து உறுப்புகளையும் வயிற்றுக்குள் போட்டுவிட்டு ஊசிநூல் கொண்டு கோணி தைப்பது போல் தைக்கிறார்கள். அவ்வளவு தான்.
ஊசிநூல் கொண்டு தைத்த பின், வெள்ளைத் துணியில் உடல் சுற்றப்பட்டு உடலை வெட்டியவர்களே அவ்வுடலுக்கு சந்தனம், குங்குமமிட்டு ரோஜா மாலையோடு வழியனுப்பி வைக்கிறார்கள். உடலையும் மனதையும் ஒருசேர உலுக்கிய தருணம் இதுதான். வெறுமனே அறுத்துப்போட்டு அள்ளிக்கோ என்ற பாணியில் அடுத்த பிணத்தை அறுக்கத் தொடங்கினால் கசாப்பு கடை உணர்வு தான் எஞ்சியிருக்கும். ஆனால், அதற்கு பின்னான இந்த சந்தனம், குங்குமம் செய்கைகள் தான் உண்மையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதை ஏன் இப்போது எழுதுகிறேன் என்ற கேள்வி உங்களை தொக்கி நிற்கலாம். அதற்கும் பதில் உண்டு. இரண்டாவது நாள் நாங்கள் சென்று பார்த்த நான்கு கேஸூம் தற்கொலை தான். வெவ்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்கள். நான்கில் ஒன்று 21 வயதுடைய ஆண். தீக்குளித்து உயிரை மாய்த்தவன். இங்கு நமக்கு அருளப்பட்டிருக்கும் வாழ்வு பற்றிய உன்னதங்களையெல்லாம் தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பவரிடம் கற்பித்தால் நிச்சயம் போடா மயிரு என்று தான் சொல்வார்கள். தற்கொலைக்கு பின்னாக நம் நேசித்த உடலை என்னவெல்லாம் செய்வார்கள் என்று ஒரு கணம் யோசியுங்கள். யோசிப்பதைக் காட்டிலும் ஒரு முறையாவது போஸ்ட் மார்ட்டத்தை நேரில் பாருங்கள் என்று எளிதில் சாத்தியமற்றதை சொல்ல மாட்டேன். போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட உடலில் அந்த வெள்ளைத் துணியை விலக்கிவிட்டு பாருங்கள். நிச்சயம் சாவைக் காட்டிலும் அது எத்தனை கொடூரமானது என்று நீங்கள் உணரலாம். உங்களை நேசித்தவர்கள் கூட உங்கள் உடலை கட்டிப்பிடித்து அழ இயலாத நிலைக்கு உங்கள் ஸ்தூல உடல் இருக்கும். அவ்வளவு தான்.!!
இரண்டாவது நாள் பார்த்த ஒரு கேஸ் வயலுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லி சாப்பிட்டு இறந்தவர். அவருக்கு போஸ்ட் மார்ட்டம் முடிந்த பின், அங்கிருந்த மருத்துவர் ஒருவர் கேஸைப் பற்றி பாடமெடுத்துவிட்டு, ரொம்ப டேஞ்சரான cardiac poison (இதய நஞ்சு) எது என்று கேட்டார் ?
Digitalis, aconitum ல் தொடங்கி ஒவ்வொன்றாக கூற, இல்லை இல்லையென்று மறுத்தவர். லவ் என்று கூறிவிட்டு சிறிது புன்னகையோடு கிளம்பி சென்றார். அந்த சூழ்நிலையில் யாருமே எதிர்ப்பார்க்காத பதில் அது.
அவ்வளவு தான் வாழ்க்கையும் !! எதையும் ஜஸ்ட் லைக் தட் என்று சிறிது புன்னகையோடு கடந்தால் கொஞ்சமேனும் வாழலாம் என்பதை அந்த இரண்டு நாள் எனக்கு சொல்லியது.
~~
ஜூலை 26, 2019


Comments
Post a Comment